நின் சலனம்
மலரில் இளைப்பாரும
பட்டாம்பூச்சயின் சிறகசைப்பாய்
உன் நினைவுகளில்
என் இதயம் இமைமூடி
உறங்கமறுக்கும் இருவிழிகளுக்கு
இடையில்
திறந்தே கிடக்கிறது
உன் முகப்படம்
கறையைக் கடக்காத அலைகள்
மீண்டும் மீண்டும்
அதன் முயற்சிபோல
நானும் காதலில்
உனக்கு ஒரு புதுப்பெயர்
ஒப்பிடுகிறேன் திருடி
மலர்மோதி மலர் சிதைந்ததில்லை
உன் பொய்கோபம் போல
நாம்
அடிக்கடி பிரிக்கப்படுகிறோம்
என் தனிமையை கலைக்கும்பொதெல்லாம்
நம்
யுத்தஙகள் நீண்ட மௌனத்தில்
இதயங்கள் சரணடைந்தன.
மீட்சி
பிரத்யேக அழைப்பொலியில்
அவிழும் காட்சிகள்
நடுநிசியில் விழித்துக்கொண்டு
இருள் வெளியில் வேட்கை பிரசன்னமாகிறது
பெறுவது ஒன்றுமில்லாதபோதும்
உடைபடுகிறது தொலைந்த பிம்பங்கள்
வெவ்வேறாக எட்டிப்பார்க்கும்
தீராத ஏக்கத்தின் நினைவு
பெரும் கனவுகளாக சபிக்கின்றனெ.
காதலிசம்
நம்
சந்திப்புகளில் சருக்கி விழுகிறது
இதயம்
குடையிருந்தும்
நீ இருந்தும் மழையில்லை
இலக்கியமே
உன் மௌனப்பேச்சின் பரிசு
இன்று வரை
உண்மையை பேசமுடியவில்லை
உன்னோடு
வருடிக்கிடக்கிறது
என் கழுத்துக்கு கீழே உன் வதனம்
“அம்மா” வை முந்திக்கொண்டு
தும்மலில் உன் பெயர்
கனிபறிக்கும் ஆவளில் மரமேறுகிறான்
மரம் எதுவாகிறது
மரத்திலுள்ள கனிகள் அதன்
காலத்தை காட்டிக்கொடுக்கிறது
கனிகளை பறிக்கிறான்
விழ மறுக்கிறது
மரத்தோடு கனிகளை சுவைக்கிறான்
பிறகு
எறும்பின் பாவனையில்
மரமெங்கும் பரவுகிறான்
மரம் வேரோடு சாய்வதுபோல்
அசைகிறது
பெறும் மிரட்ச்சியுடன் அதன்
கிளைகளை பற்றிக்கொண்டு
அவனும்
மரத்தோடு அசைகிறான்
உயிர்வதை துவங்குகிறது
மெல்ல மெல்ல கீழிறங்குகிறான்
பரபரப்பும் பயமும் தீர்ந்தவனாய்
தலைமுறைபகிர்வுகளாகிறது
ஜன்னலோரம்
இன்று
வெய்யில் அதிகம் தான்
அதன் பலனோ என்னவோ
மழை
மழையின் சுவடுகளை
தாங்கியிருந்த செடியின் இலைகள்
எங்கும் ஈரப்பதம்
இருப்பினும் இரவு வந்துவிட்டது
நிலவும் தான்
கசியும் நிலவொளியில்
எல்லாம் அழகு தான்
சிறு
சிறு நீர் தேக்கங்களில்
சிதறிக்கிடக்கிறது நிலவு
நிசப்தங்களில்
முன்னுரிமைபெற்ற இரவுபூச்சிகள்
ஏதோ பேசிக்கொள்கிறது
இந்த மௌனத்தை கலைக்கிறது
இலைகள் தாங்கிவிட்ட
மழையின் சடலங்கள்
மழைகலந்த காற்று
என்னுள் சில்லிப்பூட்டகவிதை ஏக்கமாய்
புன்னகைக்கிறேன்.
காதலின் குறியீடு
கண்கள்
கண்கள் மௌனம்
ஏதோ
ஒருவித சலனம்
நிகழ்காலங்கள்
நினைவில் இல்லை
புரிந்தபோதும்
வார்த்தையில் வறட்சி
உறங்கும் பாவனை
கனவு வேண்டல்
விடிந்ததும்
முதல் நினைவு
அதிக நேர அலங்கரிப்பு
இதய துடிப்பு கூட
அதன் பெயரில்
அழுவதற்கான வாய்ப்புகள்
காத்திருந்து பெறும்
மருத்துவமில்லாத வியாதி
கண்ணீர் வரைபடங்கள்
கண்ணங்களில்
காணாத பொழுதெல்லாம்
அது
வலியா ?
சுகமா ?
அவஸ்தையை பற்றிக்கொண்டு
தேம்ப தேம்ப விழிக்கும்
எதிர்படும்
நிஜங்கள் நிழலென…
ஓவியமாய்…
ஓவியம் அந்த ஒன்று மட்டும்
விழிவிழுந்து கடக்கும் வரை
தீவிரப்படும்
லப்டப இசையென…
இறக்கமின்றி கொலைபடும்
பூக்கள் காதலின் குறியீடுகள்
சம்மதம் பெற…
எல்லாம் காதலாய்
அந்த
இதய சேர்க்கை நிகழும் வரை…!
பிரிவின் நீட்சி
புதுப் புது அவதரிப்புகளாக
ஓவ்வொரு பயணமும்
கையசைக்கத் தாமதித்து
கலங்கிய கண்களைத் திருட்டுத்தனமாக
துடைத்துக் கொண்டும்
சிரிக்க முடிகிறதே சில சமயங்களில்
அழுகையை அடிமனதில்
அடக்கிக்கொண்டு வார்த்தை வராமல்
முகம் கோணி தலையசைத்து
விடைபெறும்போது
விருட்டெனச் சிந்தும்
சில கண்ணீர்த் துளிகள்
கவலையில் முகம் சோர்ந்து
கவலைபடாதே எனச் சொல்லும்
தோரணையில் ஒவ்வொன்றும்
உறவுக்குள்ளும் நட்வுக்குள்ளும்
மனதை விட்டுவிட்டு
வாழ்வை கோபிக்க முடியா
பட்சமாய்
தொலைவாய் சென்று
திரும்பிப் பார்க்கும் கணங்கள்
ஈரம் படாத இதழ்கள்
வறட்டுப் புன்னகையில்
கை குலுக்கி
விடை கொடுத்த முகங்கள்
அதே இடத்தில் எல்லாம்
புள்ளியாய்க் கண்ணில் கரைய
விசும்பும் இதயத்தோடு
பயண நடுவில் இமை மூடி
தூங்கும் பாவனையில்
பின் நோக்கி உருளும் நினைவுகள்
எல்லாம்
சிறு பிரிவாய் சமாதானம்
மௌனம்
வெற்றிடமல்ல
புரட்சி
தனிமையின் பலன்
ரகசியங்களின்
தடுப்புச் சுவர்
தவத்தின் நிலை
மனதின் பக்குவம்
சப்தங்களின்
எதிர்ச் சொல்
பேச்சுக்களின்
படுக்கையறை
காதலில் பிழை
இயற்கையின் மொழி
விழிகளின் படிமம்
சில நேரங்களில்
சம்மதங்களாகவும்
சமாதனங்களாகவும்
கேள்விகளாகவும்
இறைவனுக்கும்
மனிதனுக்கும் இருக்கும்
தொடர்பு
நமக்குள்…
ஒருவித சுழற்சியால் மெதுவாக
மேலெழும்புகிறது ஏதோ ஒரு தவிப்பு
இன்பமும் துன்பமும் சமநிலையில்
சில சமிக்கைகள் நிகழ்ந்த வண்ணமிருக்க
இதழ் உடுத்தாத புன்னகை
உதிர்கிறது மனதின் ஆழத்தில்
மழைப்பதத்தின் சாராலரக ஒரே சுவாசம்
ஏறி இறங்குகிறது இருவருக்குமானதாக
வெளிச்சத்தின் அரங்கத்தில்
வௌ;வேறு நிர்ணயங்களில் தரிசித்தும்
கலைகிறது முழு சாத்தியங்களுடன்
தவத்தின் நிலை
இப்படிக்கு…
வசிப்பதற்காக
வீட்டைக் கட்டியும்
முகவரி நிரந்தரமாகியும்
வாழ்வு தேடி
புதுப் புது முகவரிகளுடன்
சேமிப்புகளுக்காக
சிதறிப் போன விசுவாசங்கள்
தூரம் தூரமாய்…
பிரிவின் பாரம் சுமந்து
முரண்களுக்கு மத்தியில்
பயணித்துக் கொண்டு
வாழ்க்கை காத்திருப்பதாக
எண்ணி
வயது கடந்துகொண்டிருக்கின்றது
கனவுகள்
ஒன்றென் பின் ஒன்றாக
யாசிக்கின்றன
பல வண்ணங்களில்
அரிதாரங்களற்ற
அவதாரம் பூண்டி ஏதேச்சைகளில்
யத்தனிக்கும்
அடுத்த இலக்கில் பெறும் பகுதி
இருப்பது அறியாமல்
நகர்ந்து கொண்டே இருக்கும்
வாழ்க்கை
திரும்பிப் பார்க்கும் போது
இழப்புகளின் மிச்சம்
தேடல்களில்
எங்கோ எங்கோ…
கடைசியாய்
மௌனத்தில் உறைந்து போகும்
மூச்சுப் பை
சவப்பெட்டியில்
குத்தப்படும் நிரந்தர முகவரி
நிச்சலனமாய்
வாழ்வின் அடிவாரத்தில்
நினைவிடங்களாக
பூர்வீகம்.